Showing posts with label வழிகாட்டி. Show all posts
Showing posts with label வழிகாட்டி. Show all posts

ஆசிரியர்கள்

அருப்புக்கோட்டையை பொருத்தமட்டுல வேதியல் பாடம்னா ஜெரால்ட் சார். கணிதம் பாடம்னா பால்ராஜ் சார். பௌதீகம் என்றால் இரத்தினசாமி சார். எந்த பள்ளிகூடத்துல படிச்சாலும் சரி TUTION போறது இவங்க கிட்ட தான்.

ஜெரால்ட் சார்கிட்ட ஒரே ஒரு நாள் மட்டும் தான் வகுப்புக்கு போனேன். வேதியல் ரொம்ப லேசான பாடம் அதுக்கு TUTION தேவை இல்லை. நாமலே படிச்சுக்கலாம்ன்னு ஒரு தைரியம் வந்ததால அதுக்கப்புறம் அவர் கிட்ட போகல. இன்னைக்கு அவர் பள்ளிக்குடம் நடத்திக்கிட்டு இருக்காருன்னு கேள்விபட்டேன்.

பால்ராஜ் சார் வேகத்துக்கு நம்மளால ஈடுகொடுக்க முடியாது கரும்பலகைல ஒரு பக்கம் எழுத ஆரம்பிச்சு அவர் மறுபக்கம் போவாரு. எழுதிக்கிட்டே அழிக்கிறாரா இல்ல அழிச்சுகிட்டே எழுதுராரானு தெரியாது. ஆனா Question bank ஒன்னு கொடுப்பாரு அத தாண்டி  பொதுத்தேர்வுல வேற கேள்வி வராது. "முக்காசோம்பேறி" அப்படீங்குற ஒரு நல்ல வார்த்தைய அறிமுகம் செஞ்சு வச்சாரு. இப்ப அவரு மாதா கோவில்ல போதகரா இருக்காருன்னு கேள்விபட்டேன்.

முதல் நாள் கிருஷ்ணசாமி சாரோட வகுப்புக்கு போனா கரும்பலகைல பாரதியார் இல்லாட்டி பாரதிதாசன் கவிதை ஒன்னு இருக்கும். நம்ம TIUTION நோட்டுல முதல் பக்கத்துல எழுதிக்கணும். சார் வந்ததும் எல்லாரும் சேர்ந்து அந்த கவிதைய படிக்கணும். அதுக்கப்புறம் பாடம் எடுக்கு துவங்குவாறு. English medium Tamil medium வித்யாசம் அவர் கிட்ட கிடையாது ரெண்டு மொழிலயும் சொல்லுவாரு. தொழில்நுட்பப வார்த்தைகள் இரண்டு மொழியிலயும் தெரிஞ்சுவச்சுக்கனும்னு நினைக்ககூடியவரு. இடை இடையே தற்கால அரசியல் பத்தி பேசுவாரு. அதுதான் highlight.

தமிழ் நாடு முற்ப்போக்கு எழுத்தாளர் சங்கம் ; கலை இலக்கிய இரவு மாதிரி நல்ல விசயங்கள அறிமுகப்படுத்துவாறு. சினிமாக்காரங்கன்னாவே அவருக்கு அம்ம்புட்டு கோவம் வரும். 

"ஒழுங்காய் பாடுபடு வயக்காட்டில்", இப்படி பாட்டு பாடுறான் சினிமாக்காரன். எந்த ஊருலையாவது வயக்காட்டுல ஆடி பாடி பார்த்ததுண்டா. அவனவன் வெயில்ல படாதபாடு பட்டு விவசாயம் பண்ணா, அதுக்கு தேவையான விலை கிடைக்குறது இல்லை. ஆனா சினிமாக்காரன் வரி ஏய்ப்பு செஞ்சுட்டு பகுமானமா பாடுறான்.

ரோட்டுல ஒரு செங்கல் இருந்தா அதுக்கு துணிய கெட்டி சாமி கும்புடுறாங்க இதெல்லாம் சரியானு கேப்பாரு. நம்ம நண்பன் வெங்கடேஷ் அவர நக்கல் அடிப்பான், "ஊருல இருக்க எந்த கோவிலையும் விட்டுவைக்காம அவரு சம்சாரம் கும்புடுது இவரு என்னடானா இப்படி பேசிகிட்டு திரியுறாரு"

ஆனா அவர பொருத்தமட்டுல சாமி கும்புடுரத அவர் கேலி பண்ணுனது இல்லை. திடீருன்னு ரோட்டுக்கு குறுக்கால கோவில் முளைக்குரத தான் அவரு நக்கல் அடிப்பாரு. குறிப்பா சாமி பேரவச்சு தப்புபன்னுறது அவருக்கு பிடிக்காது. பொறியியல் கல்லூரிக்கு மட்டுமே "Campus Interview" அப்படீங்குற மாயை உடஞ்சப்ப அவர் வேலை பார்த்த கலை அறிவியல் கல்லூரில "Campus Interview" நடந்துச்சு. 

இன்னைக்கு என்ன ஆசிரியர் தினமான்னு கேக்குறீகளா. ஒன்னுமில்லைங்க எங்க வாத்தியாருக யாவகம் வந்துச்சு. உங்க கிட்ட பகுந்துகிட்டேன்


 9 ஏப்ரல் posted in facebook.


தொடர்புடைய விவாதங்கள் மற்றும் கருத்துக்கள் காண இங்கே சொடுக்குங்கள்


: https://www.facebook.com/photo.php?fbid=2991056895332&set=a.2070942373044.2104006.1229416405&type=1&permPage=1

Netaji



On 23/01/1953 First statue of Netaji Subash Chandra Bose was inaugurated in Pazhani, Tamil Nadu by Mr. Pasumpon U. Muthuramalinga Thevar.

Netaji





உங்கள் குருதியை கொடுங்கள் 
சுதந்திரம் பெறுவது என் பொறுப்பு என்று கூறினாய்

இன்று குருதி கொடுக்க படை உண்டு
ஆனால் சுதந்திரம் பெற்றுத்தர நீ இல்லை

அஹிம்சை என்று பேசி மண்டியிட்டவர்கள் மத்தியில்
உருவாக்கினாய் தனிப்பெரும் அரசாங்கத்தை

தேசத்துக்காக பதவிகளை துறந்தாய்
பதவிக்கும் பொருளுக்கும் ஆசைப்பட்டு
தேசத்தை விலை பேசுகிறார்கள்



21 ஜனவரி
posted in Facebook

தோழர் ஜீவா



ஒத்துழமையாமை இயக்கத்தில் தீவரமாக ஈடுபட்ட காலம் : தன்னுடைய தாயார் இறந்துவிடுகிறார். இறுதி சடங்குகள் நடக்கும்போது, புது உடை அணியவேண்டும். இவரோ காதி மட்டும் உடுத்தும் கொள்கை உடையவர். அவசரத்துக்கு காதி உடை கிடைக்கவில்லை. எவ்வளவோ வற்ப்புருத்தியும் காதி உடை இருந்தால் மட்டுமே இறுதிகாரியம் செய்யமுடியும் என்று கூறியவர். இவருடைய தம்பி இறுதி சடங்குகளை செய்தார்.

ஈ.வெ.ராமசாமியி நாயக்கரின் இயக்கத்தில் இருந்தகாலம் : "நான் ஏன்நாத்திகன் ஆனேன்" என்று பகத்சிங் எழுதிய புத்தகத்தை தமிழில் வெளியிடுகிறார். நாயக்கரையும் இவரையும் காவலில் வைக்கிறார்கள். மன்னிப்பு கடிதம் கொடுத்தால் விட்டுவிடுவார்கள். நாயக்கர் மன்னிப்பு கடிதம் கொடுத்து "விடுதலை" ஆகிறார். சுயமரியாதையை அடமானம் வைத்து மன்னிப்பு கடிதம் கொடுத்து விடுதலை ஆவதில் விருப்பமில்லை இவருக்கு, சிறையில் வாடுகிறார்.

சிறுவனாக இருந்தபோது தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த தன் நண்பனை உயர்வகுப்பை சார்ந்தவருக்கான தெருவில் / கோவில்களுக்கு அழைத்து செல்கிறார். பெரியவர்களின் கோபத்துக்கு ஆளாகிறார். இந்த தீண்டாமை கொடுமையை எதிர்த்து வாழ்நாள் முழுவதும் போராடுகிறார்.

காங்கிரசில் இருந்தகாலம் : காந்தி ஒரு மகான் என அவரை காண நாடே காத்துக்கிடக்கிறது. காந்தியே இவர் இடம் தேடி வந்து சந்திக்கிறார். இவரோ காந்தியையும் அவர் கொள்கையையும் வழிபடுபவர். தீண்டத்தகாதவர்கள் குறித்து சில கருத்துக்களை முன் வைக்கிறார். காந்திக்கு அதில் முரண்பட்ட கருத்து இருக்கிறது. ஊர் ஊராக பிரச்சாரம் செய்பவர்கள் தாங்கள் சொல்லும் போதனைகளுக்கு நேரெதிராக நடந்துகொள்கிறார்கள் என்று மண் வெதும்புகிறார்.


தோழர் ஜீவா என்று அனைவராலும் அறியப்பட்ட கொள்கை மறவன் ஜீவானந்தம் அவர்களின் நினைவு நாள் நாளை. இந்நாளில் மட்டுமல்லாது எல்லா நாளும் அவருடைய கொள்கைகளையும் கொள்கையில் கொண்ட உறுதியையும் கடைப்பிடித்து அன்னாரின் வழியில் நடந்திடுவோம். (பகுதி நான்கும் ஐந்தும் நாளை)

தமிழகத்திலே தொழிலாளர்களின் நலனுக்கு போராடுவதற்காக முதல் முதலில் அமைக்கபெற்ற தொழில்சங்கத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தலைவராக இருந்தார். அவருடன் இணைந்து அந்த தொழிற்சங்கத்தில் சிறப்பான பணியாற்றியவர் தோழர் ஜீவானந்தமும் தோழர் ராமமூர்த்தியும் ஆவார்கள்.

தோழர் ஜீவானந்தம் அவர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தபோது குடும்பத்தாரோடும் அவர் சார்ந்த கட்சியினரோடும் தொடர்பில் இருந்ததில்லை ஆனால் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களோடு மட்டும் தொடர்ந்து தொடர்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


"ஆத்தீகனை ஆதரிப்பீர்களா இல்லை நாத்தீகனை ஆதரிப்பீர்களா என்று கேட்டால், என் கொள்கைப்படி நாத்தீகனை தான் ஆதரிப்பேன். அதுவே ஒரு ஆத்தீகன் ஒழுக்கமானவனாகவும் ஒரு நாத்தீகன் ஒழுங்கீனமானவனாகவும் இருந்தால் ஆத்தீகனைத்தான் ஆதரிப்பேன். ஒழுங்கற்றவன் நாத்தீகம் பேச யோக்கியதை கிடையாது." - தோழர் ஜீவானந்தம்.

சமதர்மம் பேணியவர் ஆனால் கொள்கையில் சமரசம் செய்தவர் அல்லர். தோழர் ஜீவா என்று அனைவராலும் அறியப்பட்ட கொள்கை மறவன் ஜீவானந்தம் அவர்களின் நினைவு நாள் இன்று. இந்நாளில் மட்டுமல்லாது எல்லா நாளும் அவருடைய கொள்கைகளையும் கொள்கையில் கொண்ட உறுதியையும் கடைப்பிடித்து அன்னாரின் வழியில் நடந்திடுவோம்.


17 ஜனவரி

18 ஜனவரி

தேசபக்தி தினமாக.

உண்மையான தலைவனை அடமானம் வைத்து வாங்கியது சுதந்திரம் அல்ல.
அதன் பலனை இன்றும் நாம் அனுபவிக்கிறோம்.
தன்மானம் உள்ள ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் 
நீ தான் நிரந்தர தலைவன்.

அரசாங்கங்கள் உன்னை மறக்கலாம் ஆனால்
உன் பிறந்தநாளை நாங்கள் கொண்டாடுவோம்
தேசபக்தி தினமாக.


13 ஜனவரி

பசும்பொன் முத்துராமலிங்க தேவர்


நீதிக்கட்சி சார்பாக வேட்பாளராக ராமநாதபுர அரசர் தேர்தலில் நிறுத்தப்படுகிறார். செல்வாக்கு மிக்க அரசரை எதிர்த்து தேர்தலில் நிற்க காங்கிரஸ் கட்ச்சியில் யாரும் முன்வரவில்லை. யாரை வேட்பாளராக நிறுத்துவது என்று காங்கிரஸ் கட்ச்சியில் பெரிய குழப்பம். அன்றைய AD HOC COMITTEE திகைத்து நின்றது.

அந்த தருணத்தில், இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அறியப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்கள் ஒரு முடிவு எடுக்கிறார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள், அரசரை எதிர்த்து தேர்தலில் வேட்பாளராக போட்டியிடவேண்டும் என்று. யாரும் எதிர்பாராத வகையில் மாபெரும் வெற்றி பெற்றார் தேவர் பெருமகனார்.

காலத்தின் கோலம் பாருங்கள். நேதாஜியின் அரசியல் குரு சித்தரஞ்சன் தாஸ் அவர்களின் பேரில் அமைந்த சாலையில் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களுக்கு இருக்கும் சிலைக்கு இரண்டு அடி தூரத்தில் தேவர் அவர்களுக்கும் ஜனவரி எட்டாம் திகதி கொல்கட்டாவில் முழுஉருவ சிலை திறக்கப்பட்டது.

மறைந்தாலும் மாபெரும் தலைவர்களை பிரிக்க முடியாது.



9 ஜனவரி posted in Facebook

"வீரத்தாய் வேலு நாச்சியார்"


"வீரத்தாய் வேலு நாச்சியார்" இசை நாட்டிய நாடகம் ; நாரதகான சபாவில். ஆக்கமும் ஊக்கமும் வைக்கோ.

செய்தித்தாள்களில் இந்த சின்ன விளம்பரத்தை கண்டபோது, இதுகாறும் வீர மங்கை ; வீரப்பெண் வேலு நாச்சியார் என்றே சொல்லி வந்துள்ளார்களே இது என்ன புது பட்டம் என்று புரியவில்லை.

விடுதலைக்கு போரிட்ட தமிழர்கள் என்று பெருமையாக சொன்னாலும் ; இன்று இனஒழிப்பு போருக்கு எதிராக ஒரு துருப்மையும் அசைக்காத மானங்கெட்ட தமிழனாக வாழும் நாம் இந்த நாடகத்துக்காவது போய் பார்க்கலாமே என்று சென்றேன்.


சரியாக ஆறுமணிக்கு திரு வைக்கோ அவர்கள் வந்தார். வந்திருந்தவர்களை வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களை வரவேற்க ஓடியாடி வேலை செய்தார். 
திரு. மணிவண்ணன் மற்றும் திரு. சத்தியராஜ் வந்தார்கள் ; திரு. பழ நெடுமாறன் அவர்கள் வந்தார்கள். பத்மா சுப்பிரமணியம் வந்திருந்தார்.


வரலாற்று நாடகத்தின் துளிகள்

திரை விலகி நாடகம் துவங்கியது. சம்பவங்கள் நடந்த ஆண்டு பார்வையாளர்களுக்கு நன்கு பதியும் வண்ணம் புது முறையில் துவக்கம் கொடுத்தனர். ஜான்சி ராணி அவர்கள் இந்திய நாட்டுக்காக போரிட்டதற்கு 77 ஆண்டுகளுக்கு  முன்னதாகவே ஆங்கில ஏகாதிபத்தயத்துக்கு எதிராக போரிட்டு வெற்றி பெற்றவர். மகள் ; பேத்தி என்று ஒரு சிறந்த தாயாக வாழ்தவர் என்று முன்னுரை கொடுத்த்தபோதே நாம் அந்த காலத்துக்கு நேரில் சென்றதுபோன்ற உணர்வு கிடைத்தது. 

குல வழக்கப்படி, கோவிலுக்கு வழிபடுவதற்கு செல்கிறார் மன்னர். அரசியிடம், பேச்சுவார்த்தை என்று கபட நாடகம் ஆடும் அதே வேளையில், ஆயதங்கள் இல்லாத மன்னரை, வழிபாட்டுத்தலத்தில் வைத்து, அதுவும் நூற்று கணக்கான பேர் துப்பாக்கி கொண்டு கொல்கிறார்கள். நாட்டுமக்கள் நிலை குலைந்து போகிறார்கள். நாட்டில் இருந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட வேண்டும் என்று ஆவேசமாகும் அரசியார் வேலுனாச்சியாரிடம், மாற்று வழி சொல்கிறார்கள் மருது சகோதரர்கள். அவர்களின் ஆலோசனையை ஏற்க வேண்டிய கட்டாய சூழல். திண்டுக்கலுக்கு அருகாமையில் இருக்கும் ஹைதர் அலியை சந்திக்க ஏற்பாடு ஆகிறது. 

அவ்வாறு செல்லும்போது பயணக்களைப்பில் அசதியடைகிறார் அரசியார். மயக்க நிலை நெருங்கும் வேளையில் அவருக்கு தண்ணீர் கொடுத்து உதவுகிறார் உடையால். தன்னிடம் தண்ணீர் அருந்தியவர், அரசியார் என்று தெரிந்ததும் மிரளுகிறார் உடையால். தாழ்ந்த வகுப்பை சேர்ந்தவள் நான் என்று கூறி மன்னிப்பு கோருகிறார். சிவகங்கையில் அரசர் முதல் மக்கள் வரை அனைவரும் சமம் என்று நன்றி கூறுகிறார் அரசியார். "யாரும் கேட்டால் தெரியாது என்று மட்டும் சொல்" என்று சொல்கிறார் அரசியார். அரசியார் சென்ற பின் ஆங்கிலேயர்கள் வருகிறார்கள். அங்கே மாடு மேய்த்துக்கொண்டு இருக்கும் உடையாளிடம் கேட்கிறார்கள். தெரியாது என்று சொல்கிறார் உடையால். சித்திரவதை அனுபவிக்கிறார். பின்னாளில் உடையாளுக்கு சிலை வைத்து வழிபடுகிறார்கள் அரசியார்.

உருது உட்பட ஆறு மொழிகள் தெரிந்த அரசியார் பிரெஞ்சு மொழியும் கற்றுகொள்கிறார். ஆண் உடை அணிந்து அரசி வேலுநாச்சியார் திண்டுக்கல் நோக்கி செல்கிறார். ஹைதர் அலியிடம் இருந்து சகோதரத்துவம் நிறைந்த பதில் மொழியும் உதவியும் கிடைக்கிறது. நவீன போர் தளவாடங்கள் கொடுக்க ஹைதர் அலி ஒப்புக்கொள்கிறார்.

இந்திய விடுதலை போராட்டத்தின் முதல் மனித வெடிகுண்டு.


படைகளை திரட்டுகிறார் அரசியார். எத்தனை ஆண்டுகள் ? எட்டு ஆண்டுகள். எத்தனை சிரமங்கள். ஆனால் வைராக்கியம் அதிகமாகிறது. சிற்றசர்கள் ஆதரவு தர வரும்போது ஒலிக்கும் ஒலியானது, நாமே அந்த படையில் செல்வதுபோன்ற உணர்வை தருகிறது.

எதிரியிடம் போரிடுவதற்கு முன்னாள் எதிரியின் ஆயுதங்களி அழிப்பது என்பது போர் முறை இலக்கணம். எப்படி ஆங்கிலேயர்களில் போர் தளவாடங்களை அழிப்பது ? ஆங்கிலேயர்கள் தங்களை நல்லவர்கள்போல் கட்டிக்கொள்ள, ஆண்டுக்கு ஒருமுறை மட்டும், அதுவும் நவராத்திரியன்று மட்டும் பெண்களை வழிபடுவதற்கு கோவிலுக்குள் அனுமதிக்கின்றனர். பெண்கள் தானே என்ன செய்துவிடப்போகிறார்கள் என்ற எண்ணம். இந்த என்னத்தை தவிடு பொடியாக்கும் தந்திரத்தை கையாளுகிறார் அரசியார் வேலுநாச்சியார். அவர் உருவாக்கிய பெண்கள் படையில் இருந்து 16 பேரை மட்டும் அனுப்புகிறார். அகல்விளக்கில் இருக்கும் எண்ணையை தன்மீது ஊற்றி குயிலி என்ற பெண் தெய்வம் மனித வெடிகுண்டாக மாறுகிறார். 
அதன் பின் நடந்த உக்கிரமான போரில், ஆங்கிலேயரை வென்று, சிவகங்கை சீமையை மீட்டு எடுக்கிறார் அரசியார் வேலுநாச்சியார். தன் கணவரான அரசரை சூழ்ச்சி செய்து கொன்ற ஆங்கிலேய படையின் தளபதிக்கு என்ன தண்டனை கொடுக்கலாம். உயிரை எடுத்து கணக்கு தீர்க்கலாமா ? அல்லது முடமாக்கலாமா ? இங்கே தான் அரசியார் வேலுநாச்சியார் வீரத்தாய் வேலுநாச்சியாராக, நாட்டு மக்களின் நன்மை மற்றும் நாட்டு அமைதிக்காக உயிர்ப்பிச்சை அளிக்கிறார் ஆங்கிலேயனுக்கு.



இந்த இசை நாட்டிய நாடகத்தை இயக்கியவர் ஸ்ரீராம் சர்மா. இன்று நாம் பயன்படுத்தும் திருவள்ளுவர் படத்தை வரைந்தவர் இவருடைய தந்தையார் என்று தெரிந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. பாடல்கள் அனைத்தும் அருமையாக இருந்தது. வேலுநாச்சியாராக நடித்த மணிமேகலை இவருடைய மனைவி. மருது சகோதரர்களாக நடித்தவர்கள் ; உடையாலாக நடித்தவர் ; குயிலியாக நடித்தவர் ; ஹைதர் அலியாக நடித்தவர் ஆங்கில தளபதியாக நடித்தவர் என்று அனைவருமே நன்றாக பாத்திரத்துக்கு பொருத்தமாக நடித்திருந்தனர்.

ஒரு குறிப்பிட்ட விதமான நாட்டியம் மட்டும் அல்லாது பல விதமான நாட்டியங்கள் இடம் பெற்றிருந்தது நன்றாக இருந்தது.

திரைப்படங்கள் மற்றும் நெடுந்தொடர்கள் எடுப்பதில் இருக்கும் சாதகங்கள், நாடகங்களுக்கு இருப்பதில்லை. ஒவ்வொரு காட்சி முடிந்ததும் கோர்வையாக அடுத்தவர்கள் வந்து அந்த காட்சியை உயிருட்ட வேண்டும். இது அவ்வளவு எளிதான வேலை இல்லை. 
ஸ்ரீராம் சர்மா குழுவினரின் அபார உழைப்பு ஒவ்வொரு காட்ச்சியிலும் வெளிப்பட்டது.

அதிக பொருட்ச்செலவில் ; அதிக விளம்பரத்தோடு வெளிவரும் படங்களுக்கு கூட கூட்டம் இருப்பதில்லை. இந்த நாடகம் அரங்கம் நிறைந்த காட்சியாக இருந்தது. தமிழ் உணர்வோடும் நட்டுப்பற்றோடும் குழந்தைகளோடு குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர். 

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் எத்தனயோ வரைவியல்கள் (graphics) கொண்டு எடுக்கப்படும் படங்களுக்கே திரையரங்கங்களில் அதிகபட்சம் மூன்று முறைக்கு மேல் மக்கள் கை தட்டுவது இல்லை. ஆனால் இந்த இசை நாட்டிய நாடகத்துக்கு கைத்தட்டல்கள் இருந்துகொண்டே இருந்தது. கைத்தட்டல்கள் தான் ஸ்ரீராம் சர்மா குழுவினரின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு கிடைத்த பாராட்டு பத்திரம். இருந்த போதிலும், இந்த நாடகம் பெரும்பாலான ஊர்களில் நடத்தப்பட வேண்டும். வசதி படித்தவர்கள் கட்டணம் செலுத்தவும் மற்றவர்கள் கட்டணமின்றி பார்க்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். ஒலி ஒளி பதிவு கருவி மூலம் பதிவு செய்யப்பட்ட இந்த நாடகத்தின் குறுந்தட்டு அதிகம் விற்க வேண்டும்.

நம்பிக்கை

நேதாஜி உயிருடன் இருக்கிறார். நிச்சையம் வருவார் என்று சொல்லப்பட்டது ஆனால் அவர் வரவில்லை. அது போலவே தமிழ் ஈழ தலைவர் பிரபாகரனும் வருவதற்கில்லை என்று அவநபிக்கையோடு இருப்பவர்கள் மனதில் கூட நம்பிக்கை வரும்விதமாக இருந்தது நாடகமும் திரு. வைக்கோ அவர்களின் உரையும்.

வீரத்தாய் வேலு நாச்சியாருக்கும் ; தமிழ் ஈழ தலைவர் பிரபாகரனுக்கும் 19 ஒற்றுமைகள் உண்டு என்று உரையை துவக்கிய வைகோ அவர்கள், வழமை போல உணர்ச்சிவயமாக பேசினார். வரலாற்று பதிவுகளை அசைபோட்ட திரு. வைக்கோ அவர்கள், நாடத்தில் இடம்பெறத்தவறிய மேலதிக தகவல்களை கொடுத்தார். இறுதியாக வீரத்தாய் வேலுநாச்சியார் அவர்களைப்போலவே எட்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் வருவார் தமிழ் ஈழம் மலரும் என்று முடித்தார். வந்திருந்த பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் அந்த நம்பிக்கையோடுதான் தங்கள் இல்லங்களுக்கு சென்றனர்.