மன்னிப்பு கடிதம் / பிறழ் சாட்சி


சம்பவம் ஒன்று : சுதந்திர போராட்ட காலத்தில் முன்னாள் பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் ஒரு போராட்டத்தின் போது பிறழ் சாட்சியாக செயல்பட்டது குறித்தும் மன்னிப்பு கடிதம் கொடுத்தது குறித்தும் துரோகம் செய்தது குறித்தும் இப்பொழுது பரவலாக சமூக வலை தளங்களில் வளம் வருகிறது.

மண்ணிப்பு கடிதம் கொடுத்து காட்டிக்கொடுத்த ஆளுக்கெல்லாம் விருதா அப்படீன்னு பேசுறாங்க, வாஜ்பாய் அவர்களுக்கு பாரத ரத்னா விருது கொடுத்திருப்பதை குறித்து பேசும் போது.

சம்பவம் இரண்டு : 

தேச விடுதலைக்காக போராடி தூக்குமர நிழலில் சாவை எதிர்நோக்கிக் காத்திருந்த மாவீரன் பகத் சிங் தன் சகோதரனுக்கு எழுதிய நீண்ட கடிதம் நூலாக வெளியிடப்பட்டிருந்தது. தோழர் ஜீவா இதைத் தமிழில் "நான் ஏன் நாஸ்தீகனானேன்" என்ற நூலாக மொழி பெயர்க்க, ஈ.வெ.ரா, வெளியிட்டார். இதற்காக இருவரும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கபட்டனர். சர்கஸில் இருந்து தப்பி ஓடிய ஒரு கொடிய விளங்கினைச் சங்கிலியிட்டு நாற்புரமும் இழுத்துப் பிடித்துக் கொண்டு எச்சரிக்கையாகக் கூண்டுக்கு நடத்திச் செல்வது போன்று ஜீவாவை போலீசார் சங்கிலியிட்டு இழுத்துச் சென்றனர். கோவை ஜில்லாவில் ஒரு சப்ஜெயில் பாக்கியில்லாமல் அவர் இழுத்தடிக்கபட்டார். 

ஒரு நூல் எழுதியதற்காக இம்மாதிரிக் கொடுமையைத் தமிழகத்தில் அனுபவித்தவர் வேறு எவருமிலர். ஜீவாவுக்கு இழைக்கப்பட்ட இந்த கொடுமை, தமிழக இளைஞர்கள் மத்தியிலே பெரிய கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியது.   .

பின்னர் இ.வெ . ராமசாமி நாயக்கர் மன்னிப்பு கடிதம் கொடுத்துவிட்டு சிறையிலிருந்து வெளியே வந்ததும், ஜீவாவை மன்னிப்புக் கடிதம் கொடுக்க நிர்ப்பந்தித்ததும் இருவருக்கும் இடையில் விரிசலை ஏற்ப்படுத்தியது.

சம்பவம் மூன்று :

தோழர் நல்லக்கண்ணு அவர்களின் துணைவியார் திருமதி ரஞ்சிதம் அவர்கள் பேசுகிறார், "1995 ஆம் ஆண்டு தென் தமிழகத்தில் அரசியலில் சாதி புகுந்தது. சாதிக் கலவரம் தீயாக பரவியது. அது ஓட்டபிடாரம் தாலுகாவிலும் படர்ந்தது. தேவமார்களுக்கும் தாழ்த்தப்பட்டவங்களுக்குமாக இந்த மோதல் திட்டமிட்டு தூண்டி விடப்பட்டது. ஆண், பெண்,  வயது முதிர்ந்தவர், சிறுவர் என்ற பாகுபாடுகள் பார்க்காமல் இரண்டு தரப்பிலும் கொலைகள் விழுந்தன. இந்த சூழ்நிலையில் மருதன்வாழ்வில் இருக்கவேண்டாம் என்று எங்கள் பெற்றோரை உறவினர் அனைவரும் சொன்னோம். என் தம்பி தூத்துக்குடி வந்துவிடும்படி பெற்றோரை அழைத்தான். 

அதற்க்கு என் அப்பா, இந்த ஊருக்கு நான் எவ்வளவோ பாடுபட்டிருக்கிறேன். இங்கிருக்கும் தலித் மக்களுடன் சாதி பேதமின்றி பழகியிருக்கிறேன். வேற ஊர்க்காரர்கள் என் மீது துரும்பை போட்டால் கூட நம் ஊர் மக்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட மக்களிடமிருந்து நான் விலகிச் சென்றால், நான் இந்த ஊர் மக்களை நம்பாதவன் என்று எண்ண வாய்ப்பு ஏற்ப்பட்டு விடும். அதனால் எனக்கு ஒன்றும் ஆகாது! இந்த ஊர் தலித் மக்களைப் பற்றி உங்களை விட எனக்கு நன்றாகத் தெரியும். அவர்களோடு இரண்டறக் கலந்தவன்." என்று சொல்லி வெளியூர்களுக்குச் செல்ல மறுத்து விட்டார்.

இப்படி எண்ணம் கொண்டிருந்த என் தந்தையை 1995 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஞாயிறு பகல் 12 மணிக்கு வீட்டுக்குள் நுழைந்த சாதி வெறியர்கள் என் தாய் கண் எதிரிலேயே கொலை செய்து விட்டனர். எந்த சாதி முன்னேற வேண்டுமென்று என் தந்தை பாடுபட்டாரோ அந்த சாதியைச் சேர்ந்த வெறியுட்டப்பட்ட சிலர் என் தந்தையை கொன்றது வேதனைமிக்கது."
  
இந்த கொலை வழக்கு விசாரணைக்கு வந்தபோது திரு. நல்லகண்ணு அவர்கள் வேறு விதமாக சாட்சியம் அளித்தார். குற்றவாளிகள் தப்பிப்பதற்கு அவரின் சாட்சியம் ஒரு காரணம் ஆனது.

ஆதார நூல்கள் : 

1. வந்த வினாக்களும் தந்த விடைகளும் : தோழர் நல்லகண்ணு.
  ஆசிரியர் கே. ஜீவபாரதி. 
2. ஜீவா என்றொரு மானுடன் - ஆசிரியர் பொன்னீலன்.
3. ஜீவா - ஆசிரியர் சா. இலாகுபாரதி.

No comments:

Post a Comment