“ஜெயகாந்தன் கதைகள்” நூல் வெளியீட்டு விழா


எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களை முதல் முதலில் பார்த்தது கவிப்பேரரசு வைரமுத்துவின் “மூன்றாம் உலகப்போர்” புத்தக வெளியீட்டு விழாவில் தான். “படைப்பாளிகள் என்பவர்கள் தங்கள் படைப்புகள் மூலமாக மக்களுக்கு நம்பிக்கையை உண்டாக்க வேண்டும். அச்சத்தை உண்டாக்கி சம்பாதிக்கக்கூடாது. மூன்றாம் உலப்போர், நம்பிக்கையை விதைக்கிறது” என்று பேசினார். அவரைப்பற்றி கேள்வியுற்றிருந்தாலும் அவர் எழுத்துக்களை வாசித்திராதவன் என்ற முறையில் எனக்கு சந்தேகமாகவே இருந்தது. பேச்சில் மட்டும் தான் இப்படியா இல்லை அவர் எழுத்திலும் அப்படியா என்று.

ஆனந்த விகடனில் இந்த நிகழ்ச்சி குறித்த தகவல் பார்த்தபோது, நிகழ்ச்சிக்கு போகவேண்டும், அவருடைய புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும் என்று தோன்றியது. எழுத்தாளர்களுக்கு உரிய மரியாதையை இந்த சமூகம் தருவதில்லை என்று சில எழுத்தாளர்கள் குறைபடுவதை பார்க்கிறோம். கிட்டத்தட்ட கால் நூற்றாண்டாக எழுதுவதையே நிறுத்தி விட்ட ஒரு எழுத்தாளனுக்கு மரியாதை செய்ய ஒரு விழா எடுக்கிறார்கள் என்றபோது வேடிக்கை பார்க்க போகலாம் என்று தோன்றியது.

மியூசிக் அகாடமி யின் உள்ளே செல்வது இது தான் முதல் முறை. “ஆயிரம் ரூபாய் நோட்டுக்களில் கரை படிவதே இல்லை; ஏனென்றால் கூலிக்காரர்கள் கைகளில் அது தவழ்வது இல்லை” என்று இணையத்தில் அண்மையில் வாசித்தது நினைவுக்கு வந்தது. நன்றாக பராமரிக்கபட்டிருந்த அந்த அரங்கத்தை பார்த்தபோது, பராமரிப்பு செலவு அதிகம் ஆகும் என்பது நன்றாக தெரிந்தது. நுழைவுக்கட்டணம் வசூலிப்பது அல்லது புரவலர்கள் தரும் பணத்தால் மட்டுமே அதனை ஈடுகட்ட முடியும் என்பது விளங்கியது. மேட்டுக்குடிக்கு மட்டும் தான் அது, நம்மையெல்லாம் விடமாட்டார்கள் என்று பேசும் யாராக இருந்தாலும், அவர்களும் அந்த so called மேட்டுகுடியாகும் போது அவர்கள் தரப்பு ஞாயம் புரியும். இந்த நிகழ்ச்சி குறித்து அவர்கள் இணையதளத்தில் ஒரு வரி கூட குறிப்பிடாதது சரியாக படவில்லை.

முக்கிய பிரமுகர்களுக்கு கீழ்தளத்திலும் மற்றவர்களுக்கு மேல் மாடத்திலும் இடம் கிடைத்தது. வாசகர்களோடு வாசகராக கவிஞர் பழனி பாரதி வந்திருந்தார். பலரும் எழுத்து நின்று வணக்கம் சொன்னார்கள். எனக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்து நிகழ்ச்சியை கண்டு ரசித்தார். இதுபோல பல பிரபலங்கள் / தொழிலதிபர்கள்.

நடிகை லட்சுமி பேசும் போது, ஆங்கில மோகம் காரணமாக தாய்மொழியில் படிப்பதை தவிர்க்கும் பழக்கத்தை பற்றி குறிப்பிட்டார். பதினோரு வயது வரை தமிழை எழுதபடிக்க தெரியாமல் இருந்து அதன்பின்னர் தமிழை படித்தது பற்றியும் ஜெயகாந்தன் அவர்கள் பற்றிய நினைவலைகளையும் பகிர்ந்துகொண்டார். மீண்டும் எழுத வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். வீட்டை விட்டு இறங்காமல் இணையம் மூலமாகவே தரவுகளை எடுத்து எழுதுபவர்கள் அதிகமாகிவிட்ட இந்த காலத்தில்; சாமானியர்கள் மத்தியில் வாழ்ந்து கதை எழுதும் போக்கை கொண்ட ஜெயகாந்தன் அவர்களின் உடல்நிலை அவருக்கு ஒத்துழைக்குமா என்று தெரியவில்லை.



ஓவியர் கோபுலு அவர்களின் ஓவியங்கள் / சித்திரங்கள் குறித்து சிலாகித்து பேசினார் நடிகர் சிவக்குமார். கதையின் சூழல் மற்றும் கதைமாந்தர்களுக்கேற்ற மொழிநடையில் எழுதும் பாங்கு குறித்து கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் படக்காட்சி மூலமாக பேசினார். ஓவியர் மாயா அவர்களும் ஜெயகாந்தன் அவர்களும் இரத்தின சுருக்கமாக பேசினார்கள்.

இணையதளத்தில், இவருடைய எழுத்துக்கள் அனைத்தும், விலையில்லாமலேயே கிடைக்கும்; இருந்தும் அரங்கத்தில் இவருடைய புத்தகத்தை வாங்க பெரிய தள்ளுமுள்ளு நடந்தது. ஜெயகாந்தன் அவர்களின் எழுத்தின் மூலம் ஊக்கம் பெற்றிருந்ததால் தான் மருத்துவர் ராம் தம்பதியர் இந்த விழாவினை எடுத்துள்ளார்கள் என்பது அவருடைய வரவேற்ப்புரை மூலமாக தெரிந்தது. ஜெயகாந்தன் அவர்களின் எழுத்தை ஆழமாக படித்து உணர்ந்தவர்கள் தான் இந்த விழாவுக்கு வந்திருந்தார்கள். என்னைப்போல் வேடிக்கை பார்க்க வந்திருந்தவர்கள் சிலரும் உண்டு. மருத்துவர் ராம் தம்பதியினரை பார்த்தபோது பொறாமையாக இருந்தது.

No comments:

Post a Comment