ஆன்மாவுக்கு அஞ்சலி



சுற்று வட்டார ஊர்களில் எந்த நல்லது கெட்டது நடந்தாலும் தவறாது கலந்து கொண்டு அந்த குடும்பத்தில் ஒருவராக இருப்பார். தேர்தல் நேர வெற்றி தோல்விகளை தாண்டி எதிர் முகாமில் இருப்பவர்களின் மதிப்பையும் மரியாதையையும் பெற்றவர்.

1996 ஆம் ஆண்டு பொது தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியான நேரம். பெரியப்பா மந்திரியாக பொறுப்பேற்க போகிறார் என்பது உறுதியாகிவிட்டது. எந்த துறை என்பது முடிவாகவில்லை. போக்குவரத்து துறை இவருக்கு வழங்கப்படும் சூழல். போக்குவரத்துக்கு துறை என்பது பணம் கொழிக்கும் துறை ஆனால் அதன்மூலம் நம் மக்களுக்கு அதிகம் செய்யமுடியாது என்று நினைத்து கூட்டுறவு துறை அமைச்சரானவர்.

ஒருவருக்கு ஒரு பதவி என்றிருந்தால். (கட்சிப்பணி அல்லது அரசுப்பணி) நன்றாக இருக்கும் என்று கட்சி தலைவர் ; முதல்வர் நினைப்பதாக சில பத்திரிகை தகவல்கள் வருகிறது. உடனடியாக முதல்வரை சந்திக்கிறார் பெரியப்பா. கடைசிவரை கட்சி பணி போதும். அமைச்சர் பொறுப்பு வேண்டாம் என்று கூறுகிறார். இது ஒன்றும் முடிவாகவில்லை ஆலோசனைகூட முழுவதுமாக நடக்கவில்லை; எதற்க்காக அவசரப்படவேண்டும் என்று கூறி அமைச்சர் பொறுப்பில் தொடர சொல்கிறார் முதல்வர்.

பின்னர் சில மாதங்கள் கழித்து அவருடைய துறை மாறுகிறது. வணிகவரி துறை அமைச்சர் பொறுப்பை ஏற்றார். உடனே “அரசியல் இதழ்” என்று சொல்லப்படும் ஒரு மஞ்சள் பத்திரிகை, மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டு, அவதூறான செய்தி வெளியிட்டது.

பாரதி கண்ணம்மா என்றொரு திரைப்படம் வெளியான நேரம். அதை தொடர்ந்து தென் தமிழகத்தில் சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தன. இரு பிரிவினருக்கான சண்டையாக மாறிய அந்த சச்சரவுகளை பேசி சரி செய்து அமைதியை நிலைநாட்டும் பொறுப்பு இவருக்கும் மற்ற இரண்டு அமைச்சர்களுக்கும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஊராக சென்று அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபடுகிறார். அதிக அலுப்பும் மன உளைச்சலுக்கும் உள்ளாகிறார். பயணிகள் விடுதியில் ஓய்வெடுக்க செல்கிறார்கள்.

எந்த இரண்டு பிரிவினருக்கு இடையில் மோதல் நடைபெற்றதோ அந்த இரண்டு பிரிவை சார்ந்த இரண்டு அமைச்சர்களும் அண்ணன் தம்பியாக ஒரே படுக்கை அறையில் ஓய்வெடுக்கிறார்கள். தேவையற்ற சண்டைகள் மூலம் நேரம் ; மனித ஆற்றல் ; பொருள் அனைத்தும் கண்முன்னாலேயே விரயமாவதை நினைத்து மனம் வெதும்புகிறார்.

அனைவரும் சச்சரவுகளின்றி ஒன்றாக இருந்தால் முனேற்றம் காணலாமே என்ற ஆதங்கத்தோடு அவர் உயிர் உடலைவிட்டு பிரிகிறது... இன்றும் சொந்த ஊரிலேயே மக்களின் நல்லது கெட்டதுகளில் பங்கெடுக்கும் பெரியப்பாவின் ஆன்மாவுக்கு அஞ்சலி...

No comments:

Post a Comment