தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 1

பள்ளிக்கூடத்தில் சத்திய சோதனை வகுப்புகளை நன்கு படித்து தேர்ச்சி பெற்று நற்ச்சான்றிதழ்கள் வாங்கி இருந்தேன். அதுவே வரலாறு என்று இருந்தேன். நேதாஜி குறித்தும் ; கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களுக்கு காதியடிகள் செய்த நம்பிக்கை துரோகம் குறித்தும் வரலாற்று ஆசிரியர் தனிப்பாடத்தில் சொல்லிக்கொடுத்த போது அந்த ஆசிரியர் மேல் வெறுப்பு வந்தது.

"மச்சி உன்னோட ஈமெயில் ஐடி என்ன", கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த போது ஒரு விழாவுக்கு சென்றிருந்தேன், அப்போது அங்கு வந்திருந்த வகுப்பு தோழன் கேட்டான். நான் பதில் சொன்னேன், "காலேஜ் ஐடி கார்ட நான் எடுத்துட்டு வரலடா". அது வரை எனக்கு மின்னஞ்சல் முகவரி கிடையாது. இணையத்திற்குள் நுழைந்தது இல்லை.


கல்லூரி படிப்பை முடித்த பின் மின்னஞ்சல் குழுவில் நண்பன் ஒருவன்  
இந்திரா காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஒரு கட்டுரையை முன்னனுப்பினான். அதனை படித்ததும் அவன் மேல் ஒரு வித வெறுப்பு வந்தது. நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தவர்கள் குடும்பம் பத்தி இவ்வளோ தப்பா எழுதுறாங்களே. அதுவும் மறைந்து விட்ட ஒரு பெண் ஆட்சியாளர் குறித்து இப்படி தரக்குறைவாக எழுதி இருக்கிறார்களே என்று. அதுமுதல் அந்த நண்பனோடு அனைத்து தொடர்புகளையும் நிறுத்தினேன்.

ஒரு சமயம் காவலர்களால் தாக்கப்பட்ட இந்திராகாந்தி அவர்களின் உடம்பில் இரத்தம் வந்தபோது கலைஞர் சொன்ன வார்த்தைகளை கேள்விப்பட்டபோது அவர் மீது வெறுப்பு வந்தது. இந்திராகாந்தி குறித்து விமர்சனம் செய்து வந்த பல கட்டுரைகள் வந்தன இருந்தாலும், அவரை தலைவராக முன்னிறுத்திய கர்ம வீரர் காமராசர் அவர்களே பின்னாளில் இந்திரா காந்தி பற்றி குறிப்பிடும் பொது "எல்லாம் முன்*** ஆட்சியால வந்தது" என்று சொல்லியிருக்கிறார் என்று கேள்விப்பட்ட போது....

இதுபோலவே, "தனிமனித வாழ்வில் நான் ஒன்றும் யோகியன் இல்லை", என்று பேசிய அறிஞர் அண்ணா அவர்கள், கர்ம வீரர் காமராசர் குறித்து பேசும்போது, "You are unmarried but not bachelor" என்று பேசி இருக்கிறார் என்று கேள்வியுறும் போது...

ஒரு சமய விழாவில், "இப்பலாம் ஆரியர் திராவிடர்னு பிரிவினைவாதம் பேசுறாங்க அப்படிலாம் ஒன்னும் இல்லை எல்லாரும் ஒன்னு தான்" என்று பேசிய மூதறிஞர் ராஜாஜியை மறுத்து பேசிய அறிஞர் அண்ணா அவர்கள் ராஜாஜியை குறித்து தரக்குரையாக பேசிய பேச்சை கேள்வியுற்றபோது..... 

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குறித்த பிம்பத்தில் நம்பிக்கை கொண்டிருந்த எழுத்தாளர் திரு. கல்கி அவர்கள் மற்றும் நீதியரசர் திரு. என்.கிருஷ்ணசாமி ரெட்டியார்  ஆகியோருக்கு அவரை சந்தித்த பின் ஏற்ப்பட்ட அனுபவம் குறித்து அறிந்தபோது...

காந்தியடிகளில் துவங்கி ; EVR நாயக்கர் ; மறைமலை அடிகள் என்று பல ஆளுமைகளின் இரட்டை நிலைப்பாடுகளை அறிந்து அவர்களிடமிருந்து பிரிந்த கொள்கை மறவன் ஜீவா அவர்களின் வரலாறை படிக்கும் போது...

இவ்வாறாக சில ஆளுமைகள் குறித்து பரவலாக பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்கள் செய்யும் பரப்புரைகள் / புனை கதைகள் மூலமாக அவர்கள் குறித்த ஒரு பிம்பம் நம்மிடம் இருக்கும். சில பல காலம் கழித்து அந்த புனைகதைகளின் முடிச்சுகள் அவிழ்ந்து ; உண்மை நிலை அறிந்தவர்கள், அந்த புனை கதைகள் குறித்த மறுப்புகள் வெளியிடும் போது நம் மனம் உடனே ஏற்றுக்கொள்ளாது. ஆனால் ஏதோ ஒரு காலத்தில் உண்மை நிலைகளை நாம் உணருவோம். அதுபோலவே இந்த தொடரை வாசிக்கும் உங்களுக்கும்  தோன்றலாம்.

தலைவர்கள் பலரும் தனிமனித தாக்குதல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த தொடரில் தனிமனித தாக்குதல்கள் இருக்காது. அவர்களின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்கள் இருக்கும்.

No comments:

Post a Comment