தீர்ப்பை நினைத்து திரு. கருணாநிதி மகிழ மாட்டார் ஏன்....

முந்தய காலங்களில் நடந்த சம்பவங்களை சவுக்கு நினைவுகூர்ந்துள்ளார். விட்டு போனவற்றை இங்கே நினைவுகூறுகிறேன்...


தமுக்கம் மைதானத்தில் தி.மு.க  மாநாடு நடைபெறுகிறது. ஊரிலிருந்து போனவர்களோடு சேர்ந்து நானும் திருவிழாவை பார்க்கபோவது போல போனேன். அவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தது. என்ன ஒரு கூட்டம். முதல் நாள் கோரிப்பாளையம் அருகில் பேரணி.  திருவள்ளுவர் ஆண்டை ஏன் பின்பற்ற வேண்டும் என்று முனைவர் திரு. தமிழ் குடிமகன், தினமணி நாளிதழில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அந்த கட்டுரையில் சந்தேகம் கேட்டு அவருக்கு கடிதம் எழுதி அனுபியிருந்தேன். பேரணி செல்லும் பாதையில் ஒரு சாலையில் கீழே ஓய்வாக அமர்ந்திருந்தார். அவரிடம் சென்று எதுவும் பேசவில்லை ஆனால் சில நாட்களில் என் மடலுக்கு அவரிடம் இருந்து பதில் வந்தது.

அடுத்த நாள் பகல் முழுவதும் பல்வேறு தலைப்புகளில் பேச்சாளர்கள் பேசினார்கள். மாலையில் கூட்டணி தலைவர்கள் அனைவரும் பேசினார்கள். [திரு. மூப்பனார் ; மருத்துவர் திரு. ராமதாஸ் மற்றும் பலர். நடிகர் திரு.தங்கவேலு உட்பட பல நடிகர்கள் பேசினார்கள்.]


இறுதியாக திரு. கருணாநிதி பேசவேண்டும். எப்பொழுது பேசுவார் எப்பொழுது பேசுவார் என்ற எதிர்பார்ப்பை கூட்டுவது போல ஒவ்வொருவராக பேசி பின்னிரவு ஆகிவிட்டது. தூக்கம் கண்ணை கட்டியது. இறுதியாக அவர்  பேசும்போது சொன்னார், "வாழைப்பழத்தில் ஊசி ஏத்துவது போல மருத்துவர் ராமதாசு சில கருத்துக்களை கூறினார். நாம் தான் வெற்றி  பெறபோகிறோம்  என்ற மெத்தனமாக இல்லாமல் அனைவரும் இணைந்து கடினமாக உழைக்கவேண்டும்."  அவர் பேச துவங்கி சில நிமிடங்களிலேயே தூங்கிவிட்டேன். 

"முதல்வர் செல்வி ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். மிகவும் ஆடம்பரமாக இருக்கிறார். ஆடம்பரமாக திருமணம் நடத்தினார். மமதையோடு இருக்கிறார்." என்பதுதான் குற்றசாட்டு. ஆனால் இவர்கள் ஏன் இந்த மாநாடை இவ்வளவு ஆடம்பரமாக நடத்துகிறார்கள். இதற்க்கு ஆன செலவில் பல குடும்பங்களை வாழவைக்கலாமே. இதற்க்கு பணம் எங்கிருந்து வருகிறது. சிறுவன் எனக்கு ஒரே யோசனையாக இருந்தது. ஒருவேளை ஆடம்பரத்துக்கு ஆடம்பரம் தான் பதிலோ. மக்கள் இதை தான் விரும்புகிறார்களோ?

மாநாட்டு பந்தலில் விற்கப்பட்ட சில புத்தகங்களை வாங்கியிருந்தேன். வீட்டிற்கு போய் அவற்றை படித்து பார்த்ததில் ஏன் இந்த குப்பைகளை வாங்கி வந்தேன் என்றாகிவிட்டது. 

சில மாதங்களில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் செல்வி ஜெயலலிதாவின் ஊழல் குறித்தும் முந்தய தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்தும் பேசினார்கள். தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் செல்வி ஜெயலலிதா மீதான வழக்கை முனைப்போடு கையாண்டு ; வழக்கை துரிதபடுத்தி தீர்ப்பை பெறுவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அதுகுறித்து எந்த நடவடிக்கையையும் தி.மு.க. அரசு செய்யவில்லை. ஏன் என்றால் திரு. கருணாநிதி அவர்கள் ஒரு தீர்க்க தரிசி. 

ஆம். திரு. கருணாநிதியை பொருத்தமட்டில் செல்வி ஜெயலலிதாவின் மீதான குற்றசாட்டு என்பது ஆட்சி மாற்றத்துக்கான ஒரு கருவி அவ்வளவு தான். ஊழல் தவறு என்பதோ அல்லது ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதோ; கொள்ளை அடித்த பணம் மீண்டும் அரசு கருவூலத்துக்கு வரவேண்டும் என்பதோ  அவர் கொள்கை கிடையாது. இதற்க்கு விதிவிலக்காக இந்தியாவில் எந்த அரசியல்வியாதியையும் சொல்லமுடியாது என்பது வேறு விடயம்.

1996 இல் பதவிக்கு வந்ததும் இந்த வழக்கை துரிதபடுத்தாமல் இருந்ததற்கு காரணங்கள் என்ன?

 தமிழகத்தை பொருத்தமட்டில்  திரு. கருணாநிதி மிக தெளிவாக இருந்தார். 

 1. "திராவிடம்" என்ற விற்பனை பொருளுக்கு ஒரு  சந்தையை ஏற்ப்படுத்தியாச்சு. அந்த சந்தைக்கு பங்கம் வருகிறதென்றால் அது  நம் சந்ததியினருக்கு வாழ்வாதார பிரச்சனையை ஏற்ப்படுத்தும். அந்தமாதிரியான சூழலில் வேறொரு சந்தையை ஏற்ப்படுத்தும் திறமை நம் மக்கமாருக்கு இல்லை என்பதை திரு. கருணாநிதி நன்கு உணர்ந்திருந்தார். தமிழகத்தில் இரண்டு கட்சிகள் தான். ஒன்று தி.மு.க.  மற்றொன்று அ.இ.அ.தி.மு.க. மற்றவை எல்லாம் இவற்றின் கிளை கழகங்கள் தான். மற்ற எல்லா கட்சிகளும் தனியே காகிதங்களில் கொள்கைகள் இருந்தாலும், எல்லா கட்சிகளிலும் இரண்டு அணிகள் உண்டு ஒன்று தி.மு.க. அணி மற்றொன்று அ.இ.அ.தி.மு.க. அணி.  (நேரமிருந்தால் இந்த சுட்டியை பாருங்கள் : தமிழக அரசியல் கட்சிகள் )
2. ஊழல் செய்தவருக்கு மக்கள் தீர்ப்பு கொடுத்துவிட்டார்கள். ஒரே குற்றத்துக்கு இரண்டு தண்டனைகள் கொடுக்ககூடாது. மீறி கொடுத்தால் மக்களுக்கு அனுதாபம் வரும். தமிழக தேர்தல்களின் முடிவு  என்பதே அனுதாபத்தின் வெளிப்பாடு தான் என்ற உண்மையை நன்கு உணர்ந்திருந்தார். (நேரமிருந்தால் இந்த சுட்டியை பாருங்கள் : 
தமிழகத்தில் அனுதாப அரசியல் )
3. இந்த வழக்கை துரிதபடுத்தினால் ; தீர்ப்பு வெளியானால், நாளை நம் மக்கமார் செய்ய இருக்கும் ஊழல்களுக்கும் இதே நிலைமை ஏற்ப்படலாம். இந்த தீர்ப்பை அடிப்படையாக வைத்து நம் மக்கமாருக்கு தீர்ப்பு கொடுப்பார்கள் என்ற பயம்.
4. பொதுவாகவே அரசியல் கொலைகள் குறித்த புலனாய்வுகள் முடிவற்றதாக இருக்கவேண்டும். அரசியல் வழக்குகளுக்கு தீர்ப்பு வரக்கூடாது என்பதில் திரு. கருணாநிதியும், செல்வி. ஜெயலலிதாவும். ஒத்த கருத்துடையவர்கலாகவே இருந்து வந்துள்ளார்கள். தேர்தல் நேர பரப்புரைகளுக்கு அந்த வழக்குகள் ஒரு பேசுபொருளாக இருக்கவேண்டும். அவ்வளவு தான்.

இப்படியான நேரத்தில், "வழக்கை துரிதபடுத்த வேண்டும்" என்று பொது உடமை கட்சிகள் மட்டும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தன. வேறு வழி இல்லாமல் தி.மு.க. / அரசு நடவடிக்கை எடுத்தது. மனுதாரராக திரு. சுப்ரமணிய சாமி மட்டும் இருந்தது மாறி திரு. அன்பழகனும் ஒரு மனு தாரராக சேர்ந்தார்.

1996 ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின் பெரி செல்வி.ஜெயலலிதா முதல் முறையாக கைதானார். இந்த செய்தியை கேள்வியுற்றதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். இந்திய நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை வந்தது. ஆனால் அப்போது சிலர் சொன்னார்கள், "இதெல்லாம் வெறும் கண்துடைப்பு. காட்சிகள் மாறும்."

அவர்கள் சொன்னது அப்படியே நடந்தது.

டான்சி வழக்கில், அது என்னுடைய கையொப்பமே இல்லை என்று வாதாடினார் 
நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் கருப்பு அங்கி அணியவேண்டும் என்பது கட்டாய சட்டம் கிடையாது. அதற்காக தண்டனை கொடுக்க கூடாது. அதுபோல அரசு நிலத்தை அரசு ஊழியர் வாங்க கூடாது என்று   சட்டம் ஒன்றும் இல்லை. தார்மீக அடிப்படையில் அது தவறு என்று நான் அறிந்திருக்கவில்லை. அந்த நிலத்தை நான் திருப்பி கொடுத்துவிடுகிறேன் என்று சொல்லி அந்த வழக்கிலிருந்து விடுதலையானார்.

சனிக்கிழமை மீண்டும் தீர்ப்பு வந்துள்ளது.  இந்த தீர்ப்பு என்பது திரு. கருணாநிதிக்கு பிடிக்காது. (மேலே சொல்லப்பட்ட 4 காரணங்களுக்காக.)

கடந்த வார இறுதியில் வெளிவந்த தீர்ப்பை எப்படி பார்க்கலாம்.

2G அலைக்கற்றை வழக்கில் ஊழல் நடைபெறவில்லை என்று விபரம் தெரிந்த மனசாட்சி இருக்கும் எந்த தி.மு.க. காரனும் சொல்லவில்லை. ஆனால் கோடிகளை கணக்கிட்டதில் தவறு இருக்கிறது என்ற வாதமும் கூட்டாளிகள் பலரும் இருக்கிறார்கள் என்னை மட்டும் வதைப்பதேன் என்ற வாதம் தான் ஓடிக்கொண்டு இருக்கிறது...

செல்வி ஜெயலலிதா குற்றம் செய்யவில்லை என்று விபரம் தெரிந்த மனசாட்சி இருக்கும்  எந்த அ.இ.அ.தி.மு.க.  காரனும் சொல்லவில்லை. குற்றவாளி என்று தீர்ப்பளித்ததர்க்கும்  பெரிதாக யாரும் கவலைப்படவில்லை. ஆனால் கொடுக்கப்பட்டிருக்கும் தண்டனையின் அளவில்... எந்த நேரத்தில் தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்பதில் தான்...

தீர்ப்பை எதிர்த்து சமூக ஊடகங்களில் பலரும் பதிவு செய்தார்கள். ஒவ்வொரு வரிக்கும் பதில் சொல்லமுடியும். எழுதவேண்டும் என்று நினைத்தேன் அதனால் முடிவுறாத இந்த பதிவை வெளியிடவில்லை....

ஆனால் மேற்கொண்டு எழுத வேண்டியது இல்லை என்று எனக்கு தோன்றியதற்கு ஒரு காரணம் உண்டு. முடி வெட்டுவதற்காக கடைக்கு போயிருந்தேன். தொலைக்காட்சயில் திரு முருகன் ex-IAS அவர்கள் பேசிக்கொண்டிருந்தார். செல்வி ஜெயலலிதாவுக்கு வந்த பொருளெல்லாம் அன்பளிப்பு... அதனை லஞ்சம் என்று எடுத்துக்கொள்ள முடியாது...

உடனே முடிவெட்டுபவர் சொன்னார், இத தான் பல படத்துல ஹீரோக்கள் கிட்ட நம்பியார் சொல்லுவாரு, "இத ஏன் லஞ்சம்ம்னு நினைக்குறீங்க... அன்பளிப்புன்னு எடுத்துக்குட்டு என் வேலையை செஞ்சு முடிச்சிருங்க."

இங்க தெளிவுரை எழுத வேண்டிய அவசியம் இல்லை... எல்லாரும் தெளிவாதான் இருக்காங்க....


No comments:

Post a Comment