"வீரத்தாய் வேலு நாச்சியார்"


"வீரத்தாய் வேலு நாச்சியார்" இசை நாட்டிய நாடகம் ; நாரதகான சபாவில். ஆக்கமும் ஊக்கமும் வைக்கோ.

செய்தித்தாள்களில் இந்த சின்ன விளம்பரத்தை கண்டபோது, இதுகாறும் வீர மங்கை ; வீரப்பெண் வேலு நாச்சியார் என்றே சொல்லி வந்துள்ளார்களே இது என்ன புது பட்டம் என்று புரியவில்லை.

விடுதலைக்கு போரிட்ட தமிழர்கள் என்று பெருமையாக சொன்னாலும் ; இன்று இனஒழிப்பு போருக்கு எதிராக ஒரு துருப்மையும் அசைக்காத மானங்கெட்ட தமிழனாக வாழும் நாம் இந்த நாடகத்துக்காவது போய் பார்க்கலாமே என்று சென்றேன்.


சரியாக ஆறுமணிக்கு திரு வைக்கோ அவர்கள் வந்தார். வந்திருந்தவர்களை வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களை வரவேற்க ஓடியாடி வேலை செய்தார். 
திரு. மணிவண்ணன் மற்றும் திரு. சத்தியராஜ் வந்தார்கள் ; திரு. பழ நெடுமாறன் அவர்கள் வந்தார்கள். பத்மா சுப்பிரமணியம் வந்திருந்தார்.


வரலாற்று நாடகத்தின் துளிகள்

திரை விலகி நாடகம் துவங்கியது. சம்பவங்கள் நடந்த ஆண்டு பார்வையாளர்களுக்கு நன்கு பதியும் வண்ணம் புது முறையில் துவக்கம் கொடுத்தனர். ஜான்சி ராணி அவர்கள் இந்திய நாட்டுக்காக போரிட்டதற்கு 77 ஆண்டுகளுக்கு  முன்னதாகவே ஆங்கில ஏகாதிபத்தயத்துக்கு எதிராக போரிட்டு வெற்றி பெற்றவர். மகள் ; பேத்தி என்று ஒரு சிறந்த தாயாக வாழ்தவர் என்று முன்னுரை கொடுத்த்தபோதே நாம் அந்த காலத்துக்கு நேரில் சென்றதுபோன்ற உணர்வு கிடைத்தது. 

குல வழக்கப்படி, கோவிலுக்கு வழிபடுவதற்கு செல்கிறார் மன்னர். அரசியிடம், பேச்சுவார்த்தை என்று கபட நாடகம் ஆடும் அதே வேளையில், ஆயதங்கள் இல்லாத மன்னரை, வழிபாட்டுத்தலத்தில் வைத்து, அதுவும் நூற்று கணக்கான பேர் துப்பாக்கி கொண்டு கொல்கிறார்கள். நாட்டுமக்கள் நிலை குலைந்து போகிறார்கள். நாட்டில் இருந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட வேண்டும் என்று ஆவேசமாகும் அரசியார் வேலுனாச்சியாரிடம், மாற்று வழி சொல்கிறார்கள் மருது சகோதரர்கள். அவர்களின் ஆலோசனையை ஏற்க வேண்டிய கட்டாய சூழல். திண்டுக்கலுக்கு அருகாமையில் இருக்கும் ஹைதர் அலியை சந்திக்க ஏற்பாடு ஆகிறது. 

அவ்வாறு செல்லும்போது பயணக்களைப்பில் அசதியடைகிறார் அரசியார். மயக்க நிலை நெருங்கும் வேளையில் அவருக்கு தண்ணீர் கொடுத்து உதவுகிறார் உடையால். தன்னிடம் தண்ணீர் அருந்தியவர், அரசியார் என்று தெரிந்ததும் மிரளுகிறார் உடையால். தாழ்ந்த வகுப்பை சேர்ந்தவள் நான் என்று கூறி மன்னிப்பு கோருகிறார். சிவகங்கையில் அரசர் முதல் மக்கள் வரை அனைவரும் சமம் என்று நன்றி கூறுகிறார் அரசியார். "யாரும் கேட்டால் தெரியாது என்று மட்டும் சொல்" என்று சொல்கிறார் அரசியார். அரசியார் சென்ற பின் ஆங்கிலேயர்கள் வருகிறார்கள். அங்கே மாடு மேய்த்துக்கொண்டு இருக்கும் உடையாளிடம் கேட்கிறார்கள். தெரியாது என்று சொல்கிறார் உடையால். சித்திரவதை அனுபவிக்கிறார். பின்னாளில் உடையாளுக்கு சிலை வைத்து வழிபடுகிறார்கள் அரசியார்.

உருது உட்பட ஆறு மொழிகள் தெரிந்த அரசியார் பிரெஞ்சு மொழியும் கற்றுகொள்கிறார். ஆண் உடை அணிந்து அரசி வேலுநாச்சியார் திண்டுக்கல் நோக்கி செல்கிறார். ஹைதர் அலியிடம் இருந்து சகோதரத்துவம் நிறைந்த பதில் மொழியும் உதவியும் கிடைக்கிறது. நவீன போர் தளவாடங்கள் கொடுக்க ஹைதர் அலி ஒப்புக்கொள்கிறார்.

இந்திய விடுதலை போராட்டத்தின் முதல் மனித வெடிகுண்டு.


படைகளை திரட்டுகிறார் அரசியார். எத்தனை ஆண்டுகள் ? எட்டு ஆண்டுகள். எத்தனை சிரமங்கள். ஆனால் வைராக்கியம் அதிகமாகிறது. சிற்றசர்கள் ஆதரவு தர வரும்போது ஒலிக்கும் ஒலியானது, நாமே அந்த படையில் செல்வதுபோன்ற உணர்வை தருகிறது.

எதிரியிடம் போரிடுவதற்கு முன்னாள் எதிரியின் ஆயுதங்களி அழிப்பது என்பது போர் முறை இலக்கணம். எப்படி ஆங்கிலேயர்களில் போர் தளவாடங்களை அழிப்பது ? ஆங்கிலேயர்கள் தங்களை நல்லவர்கள்போல் கட்டிக்கொள்ள, ஆண்டுக்கு ஒருமுறை மட்டும், அதுவும் நவராத்திரியன்று மட்டும் பெண்களை வழிபடுவதற்கு கோவிலுக்குள் அனுமதிக்கின்றனர். பெண்கள் தானே என்ன செய்துவிடப்போகிறார்கள் என்ற எண்ணம். இந்த என்னத்தை தவிடு பொடியாக்கும் தந்திரத்தை கையாளுகிறார் அரசியார் வேலுநாச்சியார். அவர் உருவாக்கிய பெண்கள் படையில் இருந்து 16 பேரை மட்டும் அனுப்புகிறார். அகல்விளக்கில் இருக்கும் எண்ணையை தன்மீது ஊற்றி குயிலி என்ற பெண் தெய்வம் மனித வெடிகுண்டாக மாறுகிறார். 
அதன் பின் நடந்த உக்கிரமான போரில், ஆங்கிலேயரை வென்று, சிவகங்கை சீமையை மீட்டு எடுக்கிறார் அரசியார் வேலுநாச்சியார். தன் கணவரான அரசரை சூழ்ச்சி செய்து கொன்ற ஆங்கிலேய படையின் தளபதிக்கு என்ன தண்டனை கொடுக்கலாம். உயிரை எடுத்து கணக்கு தீர்க்கலாமா ? அல்லது முடமாக்கலாமா ? இங்கே தான் அரசியார் வேலுநாச்சியார் வீரத்தாய் வேலுநாச்சியாராக, நாட்டு மக்களின் நன்மை மற்றும் நாட்டு அமைதிக்காக உயிர்ப்பிச்சை அளிக்கிறார் ஆங்கிலேயனுக்கு.



இந்த இசை நாட்டிய நாடகத்தை இயக்கியவர் ஸ்ரீராம் சர்மா. இன்று நாம் பயன்படுத்தும் திருவள்ளுவர் படத்தை வரைந்தவர் இவருடைய தந்தையார் என்று தெரிந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. பாடல்கள் அனைத்தும் அருமையாக இருந்தது. வேலுநாச்சியாராக நடித்த மணிமேகலை இவருடைய மனைவி. மருது சகோதரர்களாக நடித்தவர்கள் ; உடையாலாக நடித்தவர் ; குயிலியாக நடித்தவர் ; ஹைதர் அலியாக நடித்தவர் ஆங்கில தளபதியாக நடித்தவர் என்று அனைவருமே நன்றாக பாத்திரத்துக்கு பொருத்தமாக நடித்திருந்தனர்.

ஒரு குறிப்பிட்ட விதமான நாட்டியம் மட்டும் அல்லாது பல விதமான நாட்டியங்கள் இடம் பெற்றிருந்தது நன்றாக இருந்தது.

திரைப்படங்கள் மற்றும் நெடுந்தொடர்கள் எடுப்பதில் இருக்கும் சாதகங்கள், நாடகங்களுக்கு இருப்பதில்லை. ஒவ்வொரு காட்சி முடிந்ததும் கோர்வையாக அடுத்தவர்கள் வந்து அந்த காட்சியை உயிருட்ட வேண்டும். இது அவ்வளவு எளிதான வேலை இல்லை. 
ஸ்ரீராம் சர்மா குழுவினரின் அபார உழைப்பு ஒவ்வொரு காட்ச்சியிலும் வெளிப்பட்டது.

அதிக பொருட்ச்செலவில் ; அதிக விளம்பரத்தோடு வெளிவரும் படங்களுக்கு கூட கூட்டம் இருப்பதில்லை. இந்த நாடகம் அரங்கம் நிறைந்த காட்சியாக இருந்தது. தமிழ் உணர்வோடும் நட்டுப்பற்றோடும் குழந்தைகளோடு குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர். 

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் எத்தனயோ வரைவியல்கள் (graphics) கொண்டு எடுக்கப்படும் படங்களுக்கே திரையரங்கங்களில் அதிகபட்சம் மூன்று முறைக்கு மேல் மக்கள் கை தட்டுவது இல்லை. ஆனால் இந்த இசை நாட்டிய நாடகத்துக்கு கைத்தட்டல்கள் இருந்துகொண்டே இருந்தது. கைத்தட்டல்கள் தான் ஸ்ரீராம் சர்மா குழுவினரின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு கிடைத்த பாராட்டு பத்திரம். இருந்த போதிலும், இந்த நாடகம் பெரும்பாலான ஊர்களில் நடத்தப்பட வேண்டும். வசதி படித்தவர்கள் கட்டணம் செலுத்தவும் மற்றவர்கள் கட்டணமின்றி பார்க்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். ஒலி ஒளி பதிவு கருவி மூலம் பதிவு செய்யப்பட்ட இந்த நாடகத்தின் குறுந்தட்டு அதிகம் விற்க வேண்டும்.

நம்பிக்கை

நேதாஜி உயிருடன் இருக்கிறார். நிச்சையம் வருவார் என்று சொல்லப்பட்டது ஆனால் அவர் வரவில்லை. அது போலவே தமிழ் ஈழ தலைவர் பிரபாகரனும் வருவதற்கில்லை என்று அவநபிக்கையோடு இருப்பவர்கள் மனதில் கூட நம்பிக்கை வரும்விதமாக இருந்தது நாடகமும் திரு. வைக்கோ அவர்களின் உரையும்.

வீரத்தாய் வேலு நாச்சியாருக்கும் ; தமிழ் ஈழ தலைவர் பிரபாகரனுக்கும் 19 ஒற்றுமைகள் உண்டு என்று உரையை துவக்கிய வைகோ அவர்கள், வழமை போல உணர்ச்சிவயமாக பேசினார். வரலாற்று பதிவுகளை அசைபோட்ட திரு. வைக்கோ அவர்கள், நாடத்தில் இடம்பெறத்தவறிய மேலதிக தகவல்களை கொடுத்தார். இறுதியாக வீரத்தாய் வேலுநாச்சியார் அவர்களைப்போலவே எட்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் வருவார் தமிழ் ஈழம் மலரும் என்று முடித்தார். வந்திருந்த பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் அந்த நம்பிக்கையோடுதான் தங்கள் இல்லங்களுக்கு சென்றனர்.

No comments:

Post a Comment