தர்மதுரை

வாழ்க வளமுடன்!

இயக்குனர் சீனு ராமசாமி அவர்களுக்கு வணக்கம்,

தர்மதுரை படத்தை திரை அரங்கில் பார்த்தேன். உங்கள் படங்கள் மூன்றையும் திரை அரங்கில் பார்த்திருக்கிறேன்... தர்மதுரையில் நீங்க காட்டி இருக்கும் பகுதிகள் அருமையாக உள்ளன... கண்ணுக்கு இதமாக இருந்தது... நடிகர்களின் நடிப்பு அருமையாக இருந்தது...

மூன்றாம் பாலினத்தவர் மீது காட்டவேண்டிய பரிவு உங்கள் மீது மதிப்பை உயர்த்துகிறது. இந்த படம் பலருக்கும் உத்வேகத்தை கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மருத்துவர் ராமதாசு அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தும் கருத்தை நன்கு படம் ஆக்கி உள்ளீர்கள். மருத்துவப்படிப்பு முடித்தவர்கள் சிற்றூர்களுக்கு சென்று சேவை செய்ய வேண்டும் என்று பல காலமாக அவர் சொல்லிவருகிறார். அமைச்சராக திரு. அன்புமணி எடுத்த முயற்சிகளுக்கு எதிர்ப்பு நிலவியது... ஆனால் உங்கள் படத்தை எல்லாரும் பாராட்டுகிறார்கள்...

தென்மேற்கு பருவக்காற்று கவர்ந்த அளவுக்கு தர்மதுரை என்னை கவர வில்லை காரணங்களை இங்கே கொடுக்கிறேன்.. உங்கள் முதல் படம் குறித்து நான் எழுதிய விமர்சனத்தை பின்னூட்டத்தில் கொடுத்துள்ளேன்...

1) உங்கள் முதல் படத்தில் தீர்வுகள் அனைத்தும் உள்ளூரிலேயே இருந்தது. இந்த படத்தில் தீர்வை தேட அசலூருக்கு போக வேண்டியதாக இருக்கிறது.

2) சில வருடங்களுக்கு முன்னர் உங்கள் மனைவியின் கல்வி குறித்து பதிவு செய்திருந்தீர்கள். அந்த பதிவை படித்த போது எனக்கு வருத்தமாக இருந்தது. உங்கள் முதல் படத்தில் கூட ஒரு வசனம் "நம்ம சீயானுக்காக ஜெயிலையே காட்டினாங்க" என்பதாக. எதற்க்காக ஒரு சமுதாயத்தை தொடர்ந்து படிக்காத தர்க்குறிகளாக அல்லது குற்றபரம்பரையாகவே தொடர்ந்து காட்ட வேண்டும்? ஏன் திரு. மூக்கையா தேவர் அவர்கள் அந்த காலத்திலேயே படிக்கவில்லையா? அவருக்கும் முன்னாலேயே பலரும் படித்திருக்கிறார்களே. திரு. சுந்தர வந்திய தேவன் அவர்கள் தன்னுடைய புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறாரே. .

3) திருமணம் குடும்பம் போன்ற நிறுவனங்கள் மீது காலப்போக்கில் மக்களுக்கு நம்பிக்கை குறைந்து விடும் என்று உங்கள் நண்பர் கவிப்பேரரசு வைரமுத்து ஒரு முறை சொன்னார். அதன் தாக்கம் உங்களுக்கு அதிகம் இருப்பது போல் உள்ளது. பழனி படம் போல இருக்க வேண்டாம் ; மறைந்த இயக்குனர் ராசு மதுரவன் அவர்களின் மாயாண்டி குடும்பத்தார் போல் இருக்கவேண்டும் என்று சொல்லவில்லை..ஆனால் சகோதரர்களை ஏன் இப்படி இவ்வளவு மோசமானவர்களாக காட்ட வேண்டும்?

4) முதல் படத்தில் நிறம் குறித்த காட்சி அழகாக இருந்தது. அந்த பெண்ணை திருமணம் செய்யாமல் வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்வது போல காட்டி இருந்தீர்கள். இந்த படத்திலும் சிற்றூர் பெண்ணின் காதல் கை கூடாமல் போவது போல காட்டி இருக்கிறீர்கள். மகிழ்ச்சி. இப்படி காட்டுவது போல தொடர்ந்து காட்டுவது நல்லது. திரைப்படத்தில் இப்படி அவர்கள் சேர முடியாமல் போவதன் மூலம் உண்மையில் பலரும் சேருவார்கள். உதாரணத்துக்கு சொல்வதென்றால், தேவர் மகன் திரைப்படத்தில் தெலுங்கு பெண் கவுதமியும் தமிழ் ஆன் கமலும் ஒன்று சேராததுபோல காட்டி இருப்பார்கள். கட்டாயம் அந்த படத்துக்கு பின் தமிழ் ஆண்கள் பலரும் தெலுங்கு பெண்களை காதலித்து திருமணம் செய்து இருப்பார்கள். கிருத்துவ பெண்ணின் காதல் கை கூடாமல் போவதென்பதும் வழக்கமான தமிழ் சினிமா பாணி தான். பேராண்மை படத்தில் கதாநாயகனை காதலிக்கும் முகமதிய பெண் இறந்துவிடுவார்... ஆனால் இந்த படத்தில் எனக்கு இருக்கும் ஒரே பிரச்னை என்னவென்றால்... கதாநாயகனுக்கு தோல்விகளுக்கு பின் புகலிடமாக அல்லது வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை கொண்டுவருபவராக ஒரு தெலுங்கு பேசும் திரிவடுகரை காட்டி உள்ளீர்கள்.

5) கர்மவீரர் காமராசரை மீண்டும் நிறுவது உங்கள் தெரிவு. மகிழ்ச்சி. ஆனால் அதற்காக மாயாண்டி அல்லது முனியாண்டி போன்ற பெயர்களை ஏன் பகடி செய்யவேண்டும்.

6) நடிகர் கமல் போன்றோர் திட்டமிட்ட எதிர்மறையான பரிவை தமிழர்கள் மீது காட்டி வருகிறார்கள். பாரதிராஜா ; வைரமுத்து உட்பட உங்களைப்போன்ற இயக்குனர்களுக்கு ஏதாவது திராவிட நிர்ப்பந்தம் இருக்கிறதா?

ஒரு சமுதாயத்தை அடகு வைப்பது போல உணருகிறேன்...

குறிப்பு : நான் வன்னியர் / கள்ளர் சமுதாயத்தை சேர்ந்தவன் இல்லை.

நன்றி,

வெயில்

வளர்க வையகம்!

No comments:

Post a Comment