தென்மேற்குப் பருவக்காற்று





          மாட்டு வண்டியில் இரண்டு மாடுகளும் ஒரே சீரான வேகத்தில் ஒரே திசையில் சென்றால் பயணம் இனிதாக இருக்கும் ; இல்லாது போனால் பயணம் சிக்கல் நிறைந்ததாக இருக்கும். செழிப்பான வயல்பட்டி ஒருபுறமும் ; வறட்ச்சிக்கு வாக்கப்பட்ட ஜல்லிப்பட்டி மறுபுறமும் ; கெட்டபட்ட வண்டியின் பயணம் தான் இந்த திரைப்படத்தின் கதை. 
          


நாடு விடுதலை அடைந்ததில் இருந்து அரசாங்கங்கள் பல ஐந்தாண்டு திட்டங்கள் போட்டுவிட்டார்கள். சமூக பொருளாதார வேற்றுமைகளை களையவேண்டும் என்பதுதான் அவற்றின் நோக்கமாக சொல்லப்பட்டுள்ளது.   ஆனால் திட்டங்களால் பலனடைந்தவர்கள் யார் ?

இந்த சூழ்நிலையை எதிர்கொள்ளும் விதம் வெவ்வேறாக இருப்பது மனித இயல்பு. நம்பிக்கையில்லாமல் எதிர்மறையாக பார்க்கும் ஒரு சாரார். அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் நம்பிக்கையோடு நேர்மறையாக எதிர்கொள்ளும் மறு சாரார்.


மண்ணையும் தன் உழைப்பையும் மட்டும் நம்பி விவசாயம் செய்து நேர்மை தவறாது மகனை வளர்க்கும் விதவை தாயாக வீராயி. அவளுடைய மகனாக, கிடை போட்டு ஆடு மேய்க்கும் கதாநாயகன் முருகன். அந்த வயசுக்கு ஏற்ற சேட்டைகளும் நண்பனும். 


வறுமையின் காரணமாக, களவை தொழிலாக கொண்ட, அண்ணன்களின் உடன் பிறந்த தங்கையாக இருந்தபோதிலும் நேர்மை தவறாத கதாநாயகி பேச்சி. பள்ளிக்கூடத்தில் சத்துணவு பணிப்பெண்ணாக வேலை பார்க்கிறாள்.


இவர்கள் இருவருக்குள் பூக்கும் காதல். அதற்க்கு தடையாக சிக்கலான சூழ்நிலை. அதனை நெஞ்சுரத்தோடு எதிர்கொள்வதே இந்த திரைப்படத்தின் கதை.


கதையை நகர்த்திச்செல்லும் கதாநாயகர்களை சரியாக தேர்வு செய்தால் பாதி வேலை முடிந்து விடும் என்று   சொல்வார்கள். ஆனால் இங்கே,  "ஓ ஆட்டுக்கு வளையல் போடவா", என்று கேட்க்கும் வளையல் காரரிடம் தொடங்கி; "எனக்கு கல்யாணம் முடிவாகிவிட்டது, இது என்கிட்ட இனிமே இருக்கறது சரியில்லை", என்று சொல்லி கதாநாயகனின் புகைப்படத்தை திருப்பி கொடுக்கும் முறைப்பெண்ணாக நடித்துள்ளவர் ; அவரின் தகப்பனார் ; பள்ளிக்கூட காவல்காரர் ; பள்ளிக்கூட மாணவியர் ; பேருந்து நடத்துனர் என்று சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிப்பவர்களை கூட மிகச்சரியாக தேர்வு செய்திருக்கிறார் இயக்குனர். 


         கதாநாயகன் முருகனாக நடித்துள்ள சேதுபதி புதியவர் என்று சொல்ல தோன்றவில்லை. அவரும் கதாநாயகி பேச்சியாக நடித்துள்ள வசுந்தரா இருவரும் கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்கள். 
        
நண்பனிடம் அடக்கிவாசிப்பதிலும் ; கதாநாயகியிடம் பம்முவதும் ; வெளியில் தாயிடம்  சண்டைபோடுவது போல இருந்தாலும் உள்ளுக்குள் தாய்க்காக உருகுவது என்று பல இடங்களில் கதாநாயகன் சேதுபதி நன்றாக நடித்துள்ளார். 


கதாநாயகனிடம் அகப்பட்டுவிட்டதும் கண்களில் காட்டும் தவிப்பு ; தன்னை "திருடி" என்று சொல்லும் வீராயியிடம் காட்டும் கோபம் ; இறுதி காட்ச்சில் "உன் மகனை நீயே பத்திரமா வச்சுக்கோ" என்று பேசுவது என்று பல காட்ச்சிகளில்  கதாநாயகி வசுந்தரா நன்றாக நடித்துள்ளார். 


         காதல் காட்ச்சிகள் கண்ணியமாக படைக்கப்பட்டுள்ளது. 


வரலாரை சரிவர புரியாத சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீதும் சமுதாயத்தின்  வரலாரின் மீதும் கரை சுமற்றி பொதுமைப்படுத்துவது தவறான காரியமாகும்.          


அதிகம் படிக்காவிட்டாலும் எந்த ஒரு இக்கட்டான தருணத்திலும் உணர்ச்சிவயப்பட்டவர்கலாக மட்டும் இல்லாது விவேகத்தோடும் வைராக்கியத்தோடும் செயல்படுபவர்கள் கிராமத்து பெண்கள் என்பதனை மூன்று கதாப்பாத்திரங்கள் மூலமாக நன்கு நிறுவியுள்ளார் இயக்குனர். 




      இந்த திரைப்படத்தில் சரன்யாவைப்பற்றி என்ன சொல்லுவது? ஆத்தா வீராயி வெளுத்து வாங்கிருக்க.

     வைராக்கியத்தையும் ; மன்னிக்கும் மனோபாவத்தையும் ; பிள்ளையின் எதிர்காலம் மீது அளவுகடந்த பாசத்தையும் அழகாக கொட்டியிருக்கிறார். நம் ஊர்களில் நாம் பார்த்துப்பழகிய தாய்மார்களை இந்த வீராயி நினைவூட்டுகிறாள். 





சில காலத்துக்கு முன்புவரை அம்மா வேடம் என்றாலே ஆச்சி மனோரம்மாவின் ஆட்ச்சிதான். இப்பொழுது அதனை இரெண்டாக பிரித்துவிட்டார்கள். கல்வித்துறையை, பள்ளிக்கல்வித்துறை ; உயர்கல்வித்துறை என்று பிரித்ததுபோல், நகரத்து தாய் அல்லது பணக்கார தாய் என்றால் கீதா ; கிராமத்து தாய் அல்லது ஏழ்மையான / நடுத்தர வருவாய் கொண்ட தாய் என்றால் சரண்யா என்று பிரித்துவிட்டார்கள் போல. 




     இந்த திரைப்படத்துக்கான கதையின் களம் குறித்து (காவல்த்துறை அதிகாரியுடன்) பேசும் பெரியவரின் தோளில் சிகப்பு துண்டு. காதலன் தன் காதலியிடம் கொடுக்கும் வளையலின் நிறம் சிகப்பு. காதலி தன் ஊருக்கு செல்லும்போது அந்த பிரிவில், காதலன் காதலிக்கு  தன் சிகப்பு சட்டையின் மூலமாக சைகை கொடுக்கிறான். இவை அனைத்தும் எதேச்சையாக நடந்ததா அல்லது இயக்குனருக்கு பொது உடமை கோட்பாடு மீதுள்ள பிடிப்பின் அடையாள குறியீடுகளா ? 
      முருகனின் நண்பனாக நடித்துள்ள தீப்பெட்டி கணேசன் கலகலப்பை மட்டும் உண்டாக்கவில்லை இந்த திரைப்படம் ஆவணப்படமாக மாறாது தடுத்துள்ளார்.              
        வைரமுத்துவின் எதார்த்தமான வார்த்தைகளுக்கு இடம்கொடுத்து இசை செல்கிறது. புதுமுக இசையமைப்பாளரின் பின்னணி இசையும் நன்றாக உள்ளது. 


       முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். குடும்பத்தோடு பார்க்கவேண்டிய படம்.  

No comments:

Post a Comment